குரங்கு குட்டியை கொன்ற நாய் கூட்டத்தை பழிக்குப்பழி தீர்த்த குரங்குகள்
இந்தியாவில் – தனது குட்டியைக் கொன்ற நாய்கள் அடங்கிய கூட்டத்தைப் பழிக்குப்பழி தீர்த்த இரண்டு குரங்குகள் பற்றிய கதைதான் இன்றைய சமூகவலைதள பரபரப்பு செய்தியாக உள்ளது.
இந்தியா – மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய்க்கூட்டம் ஒன்று ஒரு குட்டிக் குரங்கைக் கடித்துக் கொன்றுள்ளது. இதனால் குரங்குக் கூட்டத்தைச் சேர்ந்த இரண்டு குரங்குகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர் சம்பவம் நடந்த லாவூல் கிராம மக்கள்.
அதன்பின்னர் அந்த கிராமத்தில் எங்கு எந்த நாய் குட்டி ஈன்றாலும் போதும், இந்தக் குரங்குகள் தேடிச் சென்று அந்த நாய்க்குட்டிகளைக் கொன்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அதுவும் ஒரே மாதிரியாக நாய்க்குட்டிகள் கொலையை நிகழ்த்தியுள்ளன இந்தக் குரங்குகள். நாய்க்குட்டிகளை தூக்கிச் சென்று மிக உயரமான இடத்தில் இருந்து கீழே வீசி கொலை செய்துள்ளன. இதுவரை இப்படியாக 250 நாய்க்குட்டிகளை அந்தக் குரங்குகள் கொலை செய்துள்ளனவாம்.
இந்தச் சம்பவம் தொடர்ந்து கொண்டே இருக்க லாவூல் கிராம மக்கள் வனத்துறையை அணுகி புகார் கூறியுள்ளனர். குரங்குகள் ஒருகட்டத்தில் குழந்தைகளையும் விரட்ட ஆரம்பித்ததால் மக்கள் வனத்துறையிடம் புகாரை கொண்டு சென்றனர். இதனையடுத்து லாவூல் கிராமத்திற்கு வந்த நாக்பூர் வனத்துறையில் ‘கில்லர் குரங்குகள்’ இரண்டையும் லாவகமாகப் பிடித்துச் சென்றுள்ளனர். குரங்குகள் இரண்டையும் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்துள்ளனர்.
குரங்குகளின் மிகவும் விநோதமான இந்தப் போக்கு கிராமவாசிகள் மட்டுமல்லாது சமூக வலைதளங்களையும் பரபரப்பாக்கியுள்ளது.(இந்து)