சவுதி அரேபிய நீதிமன்றம் ட்விட்டர் பதிவுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை
ட்விட்டர் பதிவுகளில் நாத்திகத்தை ஊக்குவித்த யேமன் நாட்டவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
இது தொடர்பாக ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (எச்ஆர்டபிள்யு)’ என்று மனித உரிமை அமைப்பு நேற்று கூறியதாவது:
“சவுதியில் உள்ள யேமன் நாட்டைச் சேர்ந்த அலி அபு லுகும் (38) என்பவர் 2 ட்விட்டர்கணக்குகள் மூலம் மத நம்பிக்கையை விமர்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சமூகஊடகங்களில் கடவுள் மறுப்பு கருத்துகளையும் பொது நெறிகள்,மத விழுமியங்களுக்கு எதிரான பதிவுகளையும் வெளியிட்டார் என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
இதில் அவரது பதிவுகள், சமய எதிர்ப்பு, சமய நம்பிக்கையின்மை மற்றும் நாத்திகத்தை ஊக்குவித்ததாக நீதிமன்றம் கருதியது. இதில் நாத்திகத்தை ஊக்குவித்தல் மற்றும் சமய எதிர்ப்புக்காக அலி அபு லுகும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த அக்டோபரில் நடைபெற்றது. இதில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்காக அலி அபு காத்திருக்கிறார். அவர் தற்போது யேமன் எல்லைக்கு அருகில் நஜ்ரானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.” இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.(இந்து)