பெண் எம்.பி.ஒருவரிடமிருந்து துப்பாக்கி முனையில் கார் கொள்ளை
இந்த ஆண்டு இதுவரை 720 கார் பறிப்பு
அமெரிக்காவின் ஃபிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண் எம்.பி.ஒருவரிடம் இருந்து துப்பாக்கி முனையில் அவரது கார், அடையாள அட்டை, அரசாங்க போன் ஆகியவற்றை பறித்துச் சென்றிருக்கிறார்கள் கொள்ளையர்கள்.
ஆளும் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மேரி கே ஸ்கேன்லென் என்பவரிடம் பட்டப்பகலில் இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் மேரிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என அவரது அலுவலகம் கூறியுள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பகல் 2.45க்கு நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக மாநகர மேயர் ஜிம் கென்னி கூறியுள்ளார்.
கொள்ளையர்களைத் தேடும்பணியில் கூட்டரசு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. உதவி வருகிறது.பல அமெரிக்க மாநகரங்களைப் போலவே ஃபிலடெல்பியாவில் கடந்த ஓராண்டாக வன் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
தெற்கு ஃபிலடெல்பியாவில் உள்ள எஃப்.டி.ஆர். பூங்காவில் தனது 2017 அக்யூரா எம்.டி.எக்ஸ். காரை நோக்கி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார் மேரி. அப்போது பின்னால் இருந்து வந்த எஸ்.யு.வி. வகை கார் ஒன்றில் இருந்த இரண்டு ஆண் கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி அவரது கார் சாவியைப் பறித்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பினர் என்கிறது அவரது அலுவலகம்.
ஃபிலடெல்பியாவில் கார் பறிப்புச் சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2019ல் 225 கார் பறிப்பும், 2020ல் 409 கார் பறிப்பும் நடந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 720 கார் பறிப்பு நிகழ்ந்துள்ளதாக போலீசை மேற்கோள் காட்டி சொல்கிறது சிபிஎஸ் நியூஸ்.(பிபிசி)