ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி விண்ணில் செலுத்த்தப்பட்டது
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நேற்று (25) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பூமியிலிருந்து விண்ணில் உள்ள பல நட்சத்திரங்களை அறிவதற்காக விண்வெளியில் தொலைநோக்கியை நிலைநிறுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி ஹப்பிள் என்ற தொலைநோக்கி பூமிக்கு வெளியே விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த விண்வெளி தொலைநோக்கி மனிதனுக்கு இதுவரை தெரிந்திடாத பல அரிய விண்வெளி தகவல்களை தெரிந்துகொள்ள வழி வகுத்தது.
அதன் அடிப்படையில் நாசா ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்த திட்டமிட்டனர். 1989-ல் தொடங்கப்பட்ட, ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம், தற்போதுதான் நிறைவேறியுள்ளது.
இந்நிலையில், இந்த விண்வெளி தொலைநோக்கி அதிநவீன ராக்கெட் மூலம், பிரெஞ்சு கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் இது சுமார் 9,30,000 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டதாக நாசா அறிவித்தது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் ஏவப்படும் காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது நாசா.
1960-களில் நாசாவின் பல விண்வெளி செயல்பாடுகளுக்கு காரணமான முக்கிய விஞ்ஞானியான ஜேம்ஸ் இ வெப்பின் நினைவாக புதிய தொலைநோக்கிக்கு ஜேம்ஸ் வெப் என பெயரிடப்பட்டுள்ளது.
தொலைநோக்கி வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ளதால் பிரபஞ்ச ரகசியங்கள், நெபுலாக்கள், நட்சத்திரங்கள் உருவாக்கம், பூமி உருவான விதம் உள்ளிட்ட அரிய தகவல்களை விஞ்ஞானிகளால் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(இந்து)