இலங்கை வெளிநாட்டு அமைச்சு, நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் 2021 டிசம்பர் 31ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.
உலகளாவிய தொற்று நோயால் முன்வைக்கப்படும் கடுமையான பொருளாதார சவால்களின் பின்னணியில் இரு தரப்பு உறவுகளை திறம்பட முன்னெடுப்பதனை உறுதி செய்யும் அதே வேளையில், நாட்டிற்குத் தேவையான வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் / பணிமனைகளைப் பராமரித்தல் தொடர்பான செலவீனங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
தெரிவு செய்யப்பட்ட மூன்று தூதரகங்கள் மூடப்பட்டவுடன், இருதரப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சார உறவுகள் மற்றும் தூதரக செயற்பாடுகளைப் பராமரித்தல் உள்ளிட்ட அவற்றின் செயற்பாடுகள் அங்கீகாரம் பெற்ற தூதரகங்களின் கீழ் வரும் அதே வேளையில், அபுஜா மற்றும் நிக்கோசியா ஆகியவற்றின் விடங்கள் இலங்கையின் வதிவிடமல்லாத உயர்ஸ்தானிகராலயங்கள் / தூதரகங்களால் மேற்கொள்ளப்படும்.
இது சம்பந்தமாக, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நைஜீரியாவுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஆபிரிக்காவில் உள்ள ஏனைய நாடுகள் முறையே அபுஜாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும், கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம், எகிப்து மற்றும் நைரோபியில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளன.
பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தின் செயற்பாடுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு, அத்துடன் பிராங்பேர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகளின் கொன்சியூலர் விவகாரங்கள் ஆகியன ஜேர்மனியின் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் வரும்.
இத்தாலியின் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் சைப்ரஸிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படுவது தற்போதைய நடைமுறையின்படி சைப்ரஸுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளைக் கையாள்வதன் மூலம் தொடரும்.
நிக்கோசியாவில் உள்ள துணைத் தூதரகத்தால் கையாளப்படும் தூதரகப் பணிகள் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் கொண்டு வரப்படும். எவ்வாறாயினும், வழக்கமான அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய சைப்ரஸில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் 6,000 இலங்கை ஊழியர் சமூகத்தின் குறிப்பிடத்தக்க தூதரக மற்றும் நலன்புரித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நிக்கோசியாவைத் தளமாகக் கொண்ட பொருத்தமான தகுதி வாய்ந்த கௌரவ தூதுவரை உடனடியாக நியமனம் செய்வதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட கௌரவ தூதுவர், ரோமில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்படுவார்.
வெளிநாட்டு அமைச்சு சைப்ரஸில் உள்ள மாறுதல் செயன்முறையை உன்னிப்பாகக் கண்காணித்து, ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் கருதப்படும் மேலதிக தீர்வுகளை எதிர்காலத்தில் வழங்கும்.
அடையாளம் காணப்பட்ட மூன்று தூதரகங்கள் தற்காலிகமாக மூடுவதற்கான தீர்மானம் தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்பட்டு, தேவையானதாக கருதப்படும் சம்பந்தப்பட்ட வதிவிடத் தூதரகங்கள் / பணிமனைகளை மீண்டும் நிறுவுவது குறித்து பரிசீலணை செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.