முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரன் திறந்து வைப்பு
முல்லைத்தீவு – முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரன் நேற்று (27) வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ஜெகத் பலிகக்கார அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான முறிகண்டி பிரதேசத்தில் இவ்வாறு பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சேவையை விஸ்தரிக்கும் வகையிலு்ம, குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையிலும் குறித்த புதிய காவலரண் திறந்து வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் புதிய காவல் நிலையங்களை அமைக்கும் சுபீட்சத்தை நோக்கி எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் குறித்த காவல் நிலையமானது இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குறித்த காவல் நிலையத்தின் ஊடாக பல்வேறுபட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைக்குட்படாத அனைத்து விசாரணைகளும், சேவைகளும் வழங்கப்படவுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கலும் திலகரட்ண, மாங்குளம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிரிந்த உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், பொலிஸ் சாஜன் சந்தன அவர்கள் குறித்த காவலரனிற்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தம் வகையிலும், குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையிலும் சுற்று காவல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் வரவேற்றுள்ளனர்.
இதுவரை காலமும் குறித்த பகுதி மக்கள் பல்வேறுபட்ட முறைப்பாடுகளிற்காக மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு செல்வதற்காக 25 கிலோ மீட்டர்வரை பயணிக்க வேண்டி ஏற்பட்டதுடன், அதிக நேரத்தினையும், செலவினையும் எதிர்கொண்டனர். இந்த காவல் அரண் அமைக்கப்ட்ட நிலையில் சாதாரணமாக தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்சினைகளை உடன் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதுடன். ஏனையை சேவைகளிற்கு வசதியாகவும் அமையும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.