இலங்கை, பங்களாதேஷ் வங்கியிடமிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடனை திருப்பிச் செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்துள்ளதுடன் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கமைவாக கால அவகாசம் நீடிக்கப்பட்டதாக பங்களாதேஷ் வங்கி அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் ஊடான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் மூன்று தவணைகளின் அடிப்படையில் 200 மில்லியன் டொலர் பணம் கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டது.
2021 ஆகஸ்ட் 19 ஆம் திகதி 50 மில்லியன் டொலர்களையும் 100 மில்லியன் டொலர் இரண்டாவது தவணை ஆகஸ்ட் 30ஆம் திகதியும், 50 மில்லியன் டொலர் இறுதி தவணை செப்டம்பர் 21 ஆம் திகதியும் வழங்கப்பட்டது.
இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தத்தின் படி, பங்களாதேஷூக்கு கடன் தொகைக்கு வட்டியாக 02 சத வீதத்தை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின்னரும் தவணை நிதி செலுத்தப்படாமல் இருந்தால், 2.5 சத வீதம் மற்றும் கடன் தொகை திருப்பிச் செலுத்த வேண்டும். எனினும் இலங்கை குறைந்த பட்சம் ஒன்பது மாதங்களுக்கு இந்த நிதியைப் பயன்படுத்துமென தாம் எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.