இலங்கை பாராளுமன்ற ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்கும் வருடாந்த நிகழ்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (28) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற செயலகப் பணியாளர்களின் பிள்ளைகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரணதரப் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெற்ற மாணவ மாணவியருக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் பணியாற்றும் 380 ஊழியர்களின் 550 பிள்ளைகளுக்கான அப்பியாசப் புத்தகங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், தற்போதைய கொவிட் ஒழுங்கு விதிகளுக்கு அமைய இந்த நிகழ்வு அடையாள நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது.
பாராளுமன்ற பணியாட்களின் நலன்புரி மற்றும் விசேட செயற்றிட்டங்களுக்கான குழு, இலங்கை வங்கி, பாராளுமன்ற ஐக்கிய நலன்புரிச் சங்கம் மற்றும் கோட்டே தியவன்னாதீவு சிக்கன மற்றும் கடன் பரிவர்த்தனை கூட்டுறவுச் சக்கம் என்பன இதற்கான நிதி அனுசரணையை வழங்கியிருந்தன.
பாராளுமன்றப் பணியாளர்கள் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாட்களுக்காக பாராளுமன்ற ஊழியர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆயிரம் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டத்தின் அடையாள நிகழ்வும் இங்கு நடைபெற்றது. பெருந்தோட்ட அமைச்சு, தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கை மேம்பாடு, அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு, தென்னை பயிர்ச்செய்கை சபை இணைந்து ஏற்பாடு செய்துள்ள “வீட்டுக்கு வீடு தென்னை” தேசிய திட்டத்தின் ஒரு அங்கமாக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பெருந்தோட்ட அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே.ஜயதிலக, தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான, தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் மாதவி ஹேரத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.