இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் கடந்த மே, ஜூன் மாதங்களில் கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. அந்த சமயத்தில், நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகினர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பின்னர், கரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரித்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெருந்தொற்று பாதிப்பு கணிசமாக குறைய தொடங்கியது. சமீபகாலமாக இந்தியாவில் தினசரி பாதிப்பின் அளவு 10 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வந்தது.
இந்நிலையில், கரோனா வைரஸின் புதிய வகையான ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் 781 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கரோனா பரவலும் கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக்கு ஆளாகினர். வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களும் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகின்றன.
இந்த சூழலில், இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட் 19 இந்தியா டிராக்கர் மென்பொருள் மூலமாக இது தெரியவந்துள்ளது.
இது குறித்து அப்பல்கலைக்கழக பேராசிரியர் பால் கட்டுமேன் கூறும்போது, “இந்தியாவில் அடுத்த சில நாட்களில் கரோனா பரவல் பல மடங்கு அதிகரிக்கும். இந்த வாரத்திலேயே அது நடக்கலாம். ஆனால், தினசரி பாதிப்பு எந்த எண்ணிக்கையில் இருக்கும் என இப்போது கூறுவது கடினம்” என்றார்.(இந்து)