நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அன்றாடம் தேவைப்படும் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் அடையாள அட்டை இலக்க ஒழுங்கிற்கு அமைய செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அனைவரும் அடையாள அட்டையை அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை அல்லது கடவுச்சீட்டை தம்முடன் வைத்திருக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டை இதற்காக பயனபடுத்த முடிந்த போதிலும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைவாகவே வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்..
அடையாள அட்டை இலக்க ஒழுங்கிற்கு அமைய பாதையில் பயணிக்க சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதிலும், அதனை பயன்படுத்தி வீணாக பிரதேசத்தில் சுற்றித் திரிவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அடையாள அட்டை இலக்கத்திற்கு மேல் வீட்டில் இருந்து வெளியேற அனுமதி அளித்துள்ள போதிலும் ஒருவர் மாத்திரமே அருகிலுள்ள கடைக்கு அல்லது சிறப்பங்காடிகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய செல்லமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
கெஸினோ உள்ளிட்ட நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. 20 வீதமானோருக்கு மாத்திரமே வர்த்தக நிலையங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தில் ஒரு ஆசனத்தில் ஒருவர் மாத்திரம் பயணிக்க முடியும். வாடகை வாகனங்களில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். பொதுப் போக்குவரத்து மற்றும் அலுவலக சேவை போக்குவரத்து தொடர்பாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.