மனிதர்களை கடித்த அணில் கருணைக் கொலை
பிரிட்டனில் மனிதர்களைக் கடித்ததற்காக ஒரு அணில் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் பிளின்ட்ஷயர், பக்லி பகுதிகளில் சாம்பல் அணில் ஒன்று 18 நபர்களைக் கடித்திருக்கிறது. உள்ளூர் மக்களால் ‘ஸ்ட்ரைப்’ என்ற பெயரால் அந்த அணில் அழைக்கப்பட்டு வந்தது.
இது குறித்து அணிலால் பாதிக்கப்பட்ட கொரின் ரெனால்ட்ஸ் கூறும்போது,
“நான் அந்த அணிலுக்குக் கடந்த மார்ச் மாதம் முதல் உணவளித்து வந்தேன். என்னுடன் அந்த அணில் நல்ல நட்புடனே இருந்தது. நான் உணவளிக்கும்போது என் கையிலிருந்து அந்த உணவை எடுத்துக்கொள்ளும்.
ஆனால், கடந்த வாரம் நான் உணவளிக்கும்போது அது என் விரலைக் கடித்தது. மேலும் பலரை இம்மாதிரியே அந்த அணில் கடித்துள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அந்த அணிலுக்கு என்ன ஆயிற்று என்று வருந்தினேன். அதன் பின்னர் அந்த அணிலை உணவளிப்பதுபோல் கூண்டு வைத்துப் பிடித்தேன். அந்த அணில் என்னை நம்பியது. நான் அந்த அணிலுக்கு துரோகம் செய்துவிட்டேன்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களால் அந்த அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதை விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.(இந்து)