crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (03) நடைபெற்றதுடன் அதில் எட்டப்பட்ட முடிவுகள்

01. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

அரிசி தொடர்பான அறிவியல் மற்றும் அதுசார்ந்த கற்கைத் துறைகளுக்கு ஏற்புடைய திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் முறைக்குப் பொருத்தமான வகையிலான பாடநெறிகளை விருத்தி செய்தல், நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்தல், ஒன்றிணைந்த ஆய்வுக் கருத்திட்டங்களை நடாத்துதல் மற்றும் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்துதல், ஆராய்ச்சிகள், வெளியீடுகள் மற்றும் ஏனைய தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 2017 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தை மேலும் 03 வருடங்களுக்கு நீடித்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக இருதரப்பினர்களுக்கும் இடையில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 ஆசனங்கள் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்தல்

இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 – 35 ஆசனங்கள் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2020 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முற்கூட்டிய தகைமைகளைக் கொண்ட 03 நிறுவனங்களிடமிருந்து போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது.

குறித்த விலைமுறிகளின் மதிப்பாய்வின் பின்னர் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய 32 ஆசனங்களைக் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவின் அசோக் லேலன்ட் கம்பனிக்கு வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. கூட்டுறவு சதுக்க கட்டுமானக் கருத்திட்டத்தின் ஆலோசனை சேவைகள் ஒப்பந்தம் வழங்கல்

கூட்டுறவுச் சதுக்கம் எனும் பெயரிலான கூட்டுறவு வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக 2021 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளுக்குமான ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஆலோசனைச் சேவை நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரலின் கீழ் விருப்பம் தெரிவித்த 07 நிறுவனங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது.

அவற்றில் 06 நிறுவனங்கள் குறித்த விலைமுறிக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஆலோசனைச் சேவைகளுக்கான ஒப்பந்தத்தை மிஹிந்து கீர்த்திரத்ன அசோசியேட்ஸ் கம்பனிக்கு வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. உட்சுற்றுப் பாவனைக்காக ஹியூமன் இம்மியூனோக்குளோபின் 75,000 பிபீ 5-6 கிராம் கொண்ட மருந்து விநியோகத்திற்கான பெறுகை

உயிராபத்து நோய்நிலைமைகளின் போது நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஹியூமன் இம்மியூனோக்குளோபின் 75,000 பிபீ 5-6 கிராம் மருந்துக் குப்பிகளைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த விலைமனுக்கோரல் இந்தியாவின் ரிலயன்ஸ் லயிஃப் சயன்ஸ் தனியார் கம்பனிக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. மெரோபனம் ( Meropenem ) ஊசிமருந்து 1 கிராம் கொண்ட 1,800,000 மருந்துக் குப்பிகள் விநியோகத்திற்கான பெறுகை

பக்ரீறியாக்கள் மூலம் ஏற்படும் சுவாச நோய்த்தொற்றுக்கள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மெரோபனம் (Meropenem) ஊசிமருந்துகள் 1 கிராம் கொண்ட 1,800,000 மருந்துக் குப்பிகளை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய 03 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய மொத்த ஊசிமருந்துத் தேவைகளின் 25% வீதத்தை விநியோகிப்பதற்காக விபரமாகப் பதிலளித்துள்ள குறைந்த விலைமுறியான இந்தியாவின் வீனஸ் ரெமடீஸ் கம்பனிக்கு வழங்குவதற்கும் ஊசிமருந்தின் செயற்றிறன் தொடர்பான இறுதிப் பரிசோதனையின் பரிந்துரைகளின் அடிப்படையில் எஞ்சிய 75% வீதமான கொள்வனவை வழங்குவது தொடர்பாக தீர்மானிப்பதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. இலங்கைப் பொலிஸ் திணைக்களத்திற்கு 750 ஜீப் வண்டிகளைக் கொள்வனவு செய்தல்

பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு 150 ஜீப் வண்டிகள் உள்ளடங்கலாக இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 750 ஜீப் வண்டிகளை இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் ( Indian Line of Credit ) கீழ் கொள்வனவு செய்வதற்காக 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கம்பனிகளிடம் போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த விலைமனுக்கோரல் இந்தியாவின் மஹேந்திரா மற்றும் மஹேந்திரா கம்பனிக்கு வழங்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. விசேட பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான வரிச் சட்டமூலம் மற்றும் 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச்சட்ட திருத்தத்திற்கான சட்டமூலம்

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மதுசாரம், சிகரட், தொலைத்தொடர்புகள், பந்தயம் மற்றும் சூதாட்டம் மற்றும் வாகனங்கள் மீதான வரி அறவீட்டு செயற்றிறனை விருத்தி செய்வதற்கு இயலுமான வகையில் பலதரப்பட்ட நியதிச்சட்டங்களின் கீழ் விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் அறவீடு செய்யும் ஒரு சில வரிகளுக்கு பதிலாக இணையவழியூடாக முகாமைத்துவப்படுத்தும் தனியானதொரு விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரியை விதிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அவ்வாறே, 2022 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதிச் சேவைகளின் அடிப்படையில் பெறுமதிசேர் வரியை அதிகரிப்பதற்கும் மற்றும் பெருந்தொற்று அல்லது பொதுச்சுகாதார நிலைமையின் கீழ் அரச மருத்துவமனைகளுக்கு பரிசளிக்கப்படும் மருத்துவ உபகரணங்கள், கருவிகள் மற்றும் இரசாயனத் திரவியங்கள் போன்றவற்றுக்கான பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் குறித்த பணிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள விசேட பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான வரிச் சட்ட மூலத்திற்கும், பெறுமதிசேர் வரி (திருத்தப்பட்ட) சட்டமூலத்திற்கும் சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. அதிபர் – ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான 03/2016 பொது நிர்வாக சுற்றறிக்கையை திருத்தம் செய்தல்

அதிபர் – ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அப்போதிருந்த சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் குறித்த சம்பள முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது ஆசிரிய ஆலோசகர் சேவை நிறுவப்படாமையால், குறித்த சேவைக்கான சம்பளத்திட்டத்தை உள்ளடக்கி அதிபர் – ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு இயலுமான 03/2016 வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை திருத்தம் செய்வதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. கூரையில் பொருத்தப்படும் சூரியமின் தொகுதிக்கான மின்கல மின்சக்தியை களஞ்சியப்படுத்தும் மின்கலத்தொகுதியை நிறுவுவதற்கு ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

2030 ஆம் ஆண்டளவில் மின்சக்தித் தேவையின் 70% வீதத்தை மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதற்காகவும் 2050 ஆம் ஆண்டளவில் எரிசக்தி உற்பத்திகளிலிருந்து வெளியேறும் கரியமில காபன் வெளியீடுகளை இல்லாது செய்வதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. தற்போது நாட்டின் மின்சாரக் கட்டமைப்புக்கு கூரையில் பொருத்தப்பட்ட சூரியமின் தொகுதிகள் மூலம் 400 மெகாவாற்று இயலளவு கொண்ட மின் விநியோகிக்கப்படுகின்றது.

இத்தொகுதிக்காக புதிய கட்டண முறை மூலம் தன்னார்வ நிதி முதலீடுகளின் பிரகாரம் மின்கலத்தொகுதியைப் பொருத்துவதற்கு ஊக்கமளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நம்பகரமான மின்சார விநியோகத்தை உருவாக்குவதற்கு இயலுமை கிட்டும். இந்நிலைமையின் கீழ் மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை அதிகளவில் தேசிய மின்கட்டமைப்புக்கு இணைக்கும் போது மேலெழக்கூடிய தொழிநுட்ப ரீதியான சவால்களை அடையாளங்கண்டு, பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன்,

குறித்த அதிகாரிகள் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பாக தொடர்ந்தும் விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு 2021 நவம்பர் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரவை உபகுழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொகுதியின் அபிவிருத்திக் கருத்திட்டம்

திருகோணமலை எண்ணெய்த்தாங்கி தொகுதிக்குரிய தற்போது இந்திய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தம் இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல் மூலம் மீளாய்வு செய்து கூட்டிணைந்த அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருநாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 24 எண்ணெய்த் தாங்கிகளை ஒதுக்குவதற்கும், லங்கா ஐ.ஓ.சி கம்பனியால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கீழ் எண்ணெய்த் தாங்கித் தொகுதியில் 14 தாங்கிகளை குறித்த கம்பனியின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒதுக்குவதற்கும்,

எஞ்சிய 61 எண்ணெய்த் தாங்கிகளில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 51% வீதமும், லங்கா ஐ.ஓ.சி கம்பனிக்கு 49% வீதமான பங்குரிமை கிடைக்கும் வகையில் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் (பிரைவெட்) லிமிட்டட் எனும் பெயரில் நிறுவப்பட்டுள்ள கம்பனியால் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2022 ஆம் ஆண்டு பொருளாதாரம் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டங்கள்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2022 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன்மூலம் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை அடைவதற்காக இலங்கைப் பொருளாதார எதிர்காலக் கண்ணோட்டங்கள் ( External Outlook ) தொடர்பாக கீழ்வரும் தகவல்கள் விபரமாக நிதி அமைச்சர் அவர்களால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

• வெளிநாட்டுக் கடன் செலுத்தல் மற்றும் எதிர்பார்க்கப்படும் பண்டங்கள் மற்றும் சேவைகள் இறக்குமதிக்கான செலவு உள்ளிட்ட 2022 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து வெளிச்செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ள அந்நிய செலாவணி தொடர்பான தகவல்கள்

• ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத்துறை மூலமான வருமானம், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம், நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட 2022 ஆம் ஆண்டில் அந்நிய செலாவணி விபரம்

• எதிர்பார்க்கப்படும் அந்நிய செலாவணிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான குறுகிய மற்றும் நீண்டகால படிமுறை முன்மொழிவுகள்

• நிலவுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்புக் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள சலுகைகள் கீழ்வருமாறு:

(i) அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5,000/- ரூபா வீதம் மாதாந்தக் கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கல்

(ii) தனியார் துறையின் தொழில் வழங்குநர்களுடன் கலந்துரையாடி குறித்த சலுகையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்

(iii) 3,500/- ரூபா மாதாந்தக் கொடுப்பனவாகப் பெறும் சமுர்த்திப் பயனாளிகளுக்கு மேலதிகமாக 1,000/- கொடுப்பனவை வழங்கல், குறித்த கொடுப்பனவை ஏனைய சமுர்த்திப் பயனாளிகளுக்கும் வழங்கல்

(iv) எதிர்வரும் போகத்தில் நெல் அறுவடையில் ஏதேனும் விளைச்சல் குறையுமாயின், தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு செலுத்தப்படும் 50/- ரூபா உத்தரவாத விலையை ஒரு கிலோவுக்கு 25/- ரூபாவால் அதிகரித்து வழங்கல்

(v) சந்தையில் அரிசி விலையில் பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வாறு செலுத்தப்படும் மேலதிக தொகை அரசாங்கத்தால் பொறுப்பேற்றல்

(vi) தமது நுகர்வுக்குத் தேவையான மரக்கறிகள் மற்றும் பழவகைச் செய்கையை ஊக்குவிப்பதற்காக வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும், அதற்குத் தேவையான நிலத்தைப் பண்படுத்துதல், விதைகளை கொள்வனவு செய்தல் போன்ற இடுபொருட்களுக்காக காணியின் அளவுக்கு ஏற்ப ஒரு ஏக்கர் வரைக்கும் உயர்ந்தபட்சம் 10,000/- ஊக்குவிப்புத் தொகையை வழங்கல்

(vii) தோட்டத்தொழிலாளர் குடும்பமொன்றுக்கு ஒரு கிலோக்கிராம் கோதுமை மா 80/- ரூபாவுக்கு 15 கிலோ கிராம் கோதுமை மாவு வழங்கல்
(viii) தேவையான சந்தர்ப்பங்களில் உள்ளூர் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைத்து அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்காக முழுமையான வரிவிலக்கு செய்தல்

நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த மேற்படி யோசனைகள் அடங்கிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 6 =

Back to top button
error: