புதிய கொரோனா வைரஸ் ‘டெல்டாக்ரான்’ கண்டுபிடிப்பு
ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் இரண்டும் இணைந்து டெல்டாக்ரான் வைரஸ்
மத்திய தரைகடல் நாடான சைப்ரஸ் நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் டெல்டாக்ரான் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
கடந்த 2021 நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இப்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், சைப்ரஸ் நாட்டில் 25 பேருக்கு டெல்டாக்ரான் என்ற புதிய வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இது குறித்து சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை பேராசிரியர் லியோண்டியோஸ் காஸ்ட்ரிக்ஸ் கூறியதாவது “தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் என இரண்டு வைரஸ்களின் பாதிப்பும் உள்ளது. இந்த இரண்டு பாதிப்பும் இணைந்து இருப்பதை டெல்டாக்ரான் வைரஸ் என அழைக்கிறோம். இதில் ஒமைக்ரானின் மரபணு அடையாளங்களும், டெல்டா வைரஸின் மரபணுத் தொகுதியும் உள்ளன.
இந்த வகை டெல்டாக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 25 பேரைக் கண்டறிந்துள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் சூழலில் அனுமதியாகும் நோயாளிகள் மத்தியில் தான் இந்தப் பாதிப்பு தெரிகிறது.
25 பேரிடமும் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்வாப் மாதிரிகளை குளோபல் இன்ஃப்லுயன்ஸா சர்வைலன்ஸ் அண்ட் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்’ (GISAID) என்ற அமைப்பின் ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம்.
இந்த வகை வைரஸ் வேகமாகப் பரவக்கூடியதா உள்ளிட்ட கூறுகளை இந்த அமைப்பு பகுப்பாய்வு செய்து தெரிவிக்கும். ஆனால், எனது தனிப்பட்ட கணிப்பின்படி, ஒமைக்ரான் வைரஸை இன்னும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒமைக்ரான் பிளஸ் திரிபு தான் மேலோங்கி நிற்கும்.” என அவர் கூறியுள்ளார்.
கடந்த 5 வாரங்களாக உலக அளவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுபோல கரோனா தொற்றும் வேகமாக பரவுகிறது.(இந்து)