மார்க்கெட்டில் 3 கிலோ வெடி குண்டு கண்டுபிடிப்பு
இந்தியா – டெல்லியில் பூ மார்கெட்டில் மர்ம பையில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வெடிபொருட்கள் சரியான நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
டெல்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள காஜிபூரில் உள்ள ஒரு பூ மார்க்கெட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.
வெடிகுண்டு செயலிழப்பு படை, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. குண்டுவெடிப்பை நடத்த எட்டு அடி பள்ளம் தோண்டப்பட்டது. சந்தைக்கு அருகில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் 3 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவை சீர்குலைக்க நடத்தப்பட்ட பயங்கரவாத முயற்சியாக இது இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
டெல்லி மற்றும் உத்தரபிரதேச எல்லைக்கு அருகே அமைந்துள்ள இந்த சந்தைப்பகுதியில் அமைந்துள்ள அந்த இடத்தை சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மார்கெட்டில் வெடிபொருட்களை வைத்தது யார் என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.(இந்து)