இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா நேற்று (14) அலரி மாளிகையில் நடைபெற்றது.
விவசாய நடவடிக்கைகளுக்கு உதவிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தை மாதம் முதல் நாள் இவ்வாறு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தேசிய தைப்பொங்கல் விழா, தமிழ் கலாசார அம்சங்களுடன் நடைபெற்றதுடன், தவில் நாதஸ்வர கச்சேரி மற்றும் பரதநாட்டிய நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பாக்லே அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அச்சிடப்பட்ட இந்து அறநெறி பாடசாலை மாணவர்களிற்கான புதிய பாடத்திட்டத்திற்கு அமைவான புத்தகங்கள் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்க்ஷ அவர்களினால் மாணவர்களுக்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்று குழுக்களின் பிரதி தலைவர் அங்கஜன் ராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், பிரதமரின் வடக்கு கிழக்கிற்கான ஒருங்கிணைப்பு செயலாளர் திரு. கீதநாத் காசிலிங்கம், பிரதமரின் மலையகத்திற்கான ஒருங்கிணைப்பு செயலாளர் திரு.செந்தில் தொண்டமான், இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.உமா மகேஸ்வரன் மற்றும் அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.