இலங்கையின் நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி செனரத் அவர்கள், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அவர்களினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்று (19) காமினி செனரத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை நிர்வாகச் சேவையில் விசேட தர அதிகாரியான காமினி செனரத் அவர்கள், ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மேலதிகச் செயலாளராகவும் பணிக்குழாம் பிரதானியாகவும், 2004 – 2005, 2019ஆம் ஆண்டுக் காலப்பகுதிகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்ற பின்னர் பிரதமரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஹக்மன மெதடிஸ் கல்லூரி, மாத்தறை ராஹுல மற்றும் காலி ரிஷ்மன்ட் கல்லூரிகளில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி பயின்றுள்ள செனரத் அவர்கள், களனி பல்கலைக்கழகத்தில் முதல் பட்டத்தைப் பெற்று, இலங்கை நிர்வாகச் சேவையில் இணைந்துகொண்டார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணினித் தொழில்நுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் பெற்றுள்ள அவர், ஐக்கிய இராச்சியம், ஜப்பான், சிங்கப்பூர், பாகிஸ்தான், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் பயிற்சிப் பாடநெறிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் பலவற்றில் உயர் பதவிகளை வகித்துள்ள செனரத் அவர்கள், மக்கள் வங்கி, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், லிட்ரோ கேஸ் நிறுவனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்குத் தலைமைத்துவம் வகித்துள்ளார்.
பிரதமரின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டீ.எம்.அநுர திசாநாயக்கவுக்கான நியமனக் கடிதத்தையும், ஜனாதிபதி அவர்கள் நேற்றைய தினம் வழங்கினார்.
இலங்கை நிர்வாகச் சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அநுர திசாநாயக்க அவர்கள், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார். ஏற்கனவே பல அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளை வகித்துள்ள திசாநாயக்க அவர்கள், அரச சேவையில் உயர் பதவிகள் பலவற்றை வகித்த அரச அதிகாரியாவார்.
அநுர திசாநாயக்க அவர்களின் புதிய நியமனம் காரணமாக வெற்றிடமாகியுள்ள நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் பதவிக்கு, கே.டபிள்யூ. ஐவன் டீ சில்வா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான நியமனக் கடிதத்தையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.