(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
கொழும்பு -12, வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் (தேசிய பாடசாலையின்) பழைய மாணவர் சங்கம் தமது கல்லூரியின் மாணவ தலைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தலைமைத்துவ பயிற்சி பட்டறை நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் எம் மஹ்சூர் முஸ்தபா மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் எச் எம் ஹஸன் இஸ்மத் ஆகியோரின் தலைமையில் விரிவுரை மற்றும் செயற்பாடு என்ற அடிப்படையில் இரு அங்கமாக இந்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக பணிப்பாளரும் சர்வதேச உறவுகள் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளருமான கேர்ணல் நளின் ஹேரத் விரிவுரைகளையும் கோப்ரல் உதயகுமார் உடற்பயிற்சி பயிற்சிகளையும் வழங்கினார்கள்.
அல்-ஹிக்மா கல்லூரியில் தரம் 10, 11 மற்றும் க. பொ. த உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளிலிருந்து மாணவ தலைவர்களாக 2022 ஆம் ஆண்டுக்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 70 பேருக்கு இந்த தலைமைத்துவ வழிகாட்டல் பயிற்சி வழங்கப் பட்டன.
தலைமைத்துவம், நேர முகாமைத்துவம், குழு செயற்பாடு, திறன் மற்றும் ஆளுமை விருத்தி, நன்னடத்தை போன்றவைகள் தொடர்பில் கேர்னல் நளின் ஹேரத் பயிற்சிகளை வழங்கினார்.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஊடகவியலாளருமான ஸாதிக் ஷிஹான் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன் பகுதி தலைவரான ராஜேஸ்வரா ஆசிரியர் பாடசாலை சார்பா உரையையும் நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் எம் எஸ் எம் ஹஸன், உப தலைவர் எம் எஸ் எம் புஹாத், ஆசிரியர்களான அஷ்பாக், எம். நஜாத் உட்பட பழைய மாணவர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பயிற்றுவிக்கப்பட்ட மேற்படி மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கல் மற்றும் சின்னங்கள் அணியும் நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.