crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (24) நடைபெற்றதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. அக்குரஸ்ஸ புதிய பேரூந்து நிலையத்தை நிர்மாணித்தல்

2012 ஆம் ஆண்டு அக்குரஸ்ஸ நகர அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அக்கருத்திட்டத்தின் முதலாம் கட்டமாக 4.5 ஏக்கர்களை அபிவிருத்தி செய்து பிரதான பேரூந்து நிலையத்தை நிர்மாணித்தல் மற்றும் வர்த்தக அபிவிருத்திகளுக்குத் தேவையான அடிப்படை விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 1.75 ஏக்கர்களில் 20 தரிப்பிடங்களுடனும் மற்றும் ஏனைய வசதிகளுடனும் கூடிய பிரதான பேரூந்து நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கருத்திட்டத்தின் இறுதி கட்டிட வடிவமைப்பு மற்றும் பொறியியல் திட்டங்களுக்கமைய 474 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. ‘உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்’ வீடமைப்பு வேலைத்திட்டத்தின் உதவித்தொகையை அதிகரித்தல்

தற்காலிக வீடுகளில் வசித்து வரும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இக்கருத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் குடும்பமொன்றுக்கு 600,000 ரூபாய்கள் உயர்ந்தபட்சம், உதவித்தொகையொன்று வீடமைப்பு நிர்மாணத்தின் முன்னேற்றத்திற்கமைய வழங்கப்படும். இக்கருத்திட்டம் 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர், கட்டுமானப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையால், அதனால் 600,000 ரூபாய்கள் உதவித்தொகையில் எதிர்பார்க்கின்ற வகையிலான வசிப்பதற்குப் பொருத்தமான முழுமையான வீடொன்றை அமைப்பதற்கு சிரமமாக அமையும்.

அதனால், 2022 ஆம் ஆண்டு தொடக்கம் தெரிவு செய்யப்படும் பயனாளிக் குடும்பங்களுக்கு குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் உதவித்தொகையை 650,000 ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாட்டை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

03. நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான கொட்டா வீதி, இராஜகிரியவில் அமைந்துள்ள காணியில் அதி-உயர் ( High- Rise ) அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

நிர்மாணம், கட்டுமானம், நிதியிடல், தொழிற்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் பொறிமுறையின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கொட்டா வீதியில் அமைந்துள்ள, 01 ஏக்கர் 01 ரூட் 9.29 பேர்ச்சர்ஸ் காணித்துண்டில் போட்டித்தன்மை அடிப்படையில் முதலீட்டு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக துப்பரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் கீழ்காணப்படும் நிரந்தர அமைச்சரவை மீளாய்வுக் குழுவால் அதி – உயர் அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த காணியை லங்கா ஒரெக்ஸ் லீசிங் கம்பனியின் தலைமைக் கம்பனியான LOLC Investment Holdings Two (Pvt) Ltdஇற்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த காணியை அப்பணிக்காக பயன்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. தோட்டத்துறையில் காணப்படும் சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைத்தல்

மலையக சமூகத்தவர்களுக்கு மிகவும் பயன்வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் தோட்டத்துறையில் காணப்படும் சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்தல் மிகவும் பொருத்தமானதாக அமையும் என அடையாளங் காணப்பட்டுள்ளது. அது தொடர்பாகப் பின்பற்ற வேண்டிய பொறிமுறைகள் தொடர்பாக பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையில், குறித்த ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகள் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய, தோட்டத்துறையில் காணப்படும் 450 சுகாதார நிறுவனங்களில் முதற் கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைப்பதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. உடல் உறுப்புக்கள், இழையங்கள் மற்றும் உயிரணுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பாக இலங்கையின் தேசிய கொள்கை

சிறுநீரகம், ஈரல் இதயம், நுரையீரல் மற்றும் கணையம் போன்ற உள்ளக உறுப்புக்கள் செயலிழக்கும் தருவாயில் உள்ள நோயாளர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான வெற்றிகரமான சிகிச்சை முறையாக உடல் உறுப்புக்கள், இழையங்கள் மற்றும் உயிரணுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை முறை கருதப்படுகின்றது.

இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டியில் அமைந்துள்ள பிரதான தேசிய நிலையங்கள் 02 உள்ளிட்ட 09 அரச மருத்துவமனைகளில் தற்போது உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உடல் உறுப்பு நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களைப் போலவே உறுப்புக்களைப் பெறும் நோயாளர்களின் வாழ்க்கை மட்டத்தை உயர்த்துதல் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான தேசிய கொள்கையொன்றின் தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, உலக சுகாதார மாநாட்டின் 57 ஆவது சமவாயம் மற்றும் மனித உறுப்புக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பாக உலக சுகாதார தாபனத்தின் வழிகாட்டல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உடல் உறுப்புக்கள், இழையங்கள் மற்றும் உயிரணுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பாக இலங்கையில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. சுகாதார சேவைகளின் தரப்பண்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை

தற்போது காணப்படும் ‘தரப்பண்பான சுகாதார சேவைகள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்ப தொடர்பான தேசிய கொள்கைக்கு’ 2015 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக சுகாதார மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ‘நோயாளர்களின் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய நடவடிக்கைகள்’ தொடர்பாக முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த கொள்கையை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுகாதார சேவைகளின் தரப்பண்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குறித்த திருத்தப்பட்ட கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்திலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் வலயங்களை நிலைப்படுத்தல் மற்றும் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார அபிவிருத்திக்கான முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் தேசிய கருத்திட்டம்

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தை பிரதேசவாரியாக கொண்டு சென்று பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்திலான கைத்தொழில் வலயங்களை அமைத்து பிரதேச கைத்தொழில் மயமாக்கல் செயன்முறையை துரிதப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய கைத்தொழில் அமைச்சால் வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் மாவட்டம்/பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள காணியின் அளவுக்கேற்ப இரண்டு வகையான கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

5-15 ஏக்கர் காணியிலான தொழிற்சாலைகள் 15-35 அளவிலான சிறியளவிலான கைத்தொழில் பேட்டை மற்றும் 15-25 ஏக்கர் காணியிலான தொழிற்சாலைகள் 35-50 ஏக்கர் அளவிலான நடுத்தர அளவிலான கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பதற்காக தேசிய குழுவொன்று மற்றும் மாவட்ட நடவடிக்கைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 2021, 2022 பெரும் போகத்தில் நெல் கொள்வனவு வேலைத்திட்டம்

நெல் விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கம் நெல் இருப்பை பாதுகாப்பாக பேணுவதையும் நோக்காகக் கொண்டு 2021/2022 பெரும் போகத்தில் அரசாங்க நெல் கொள்வனவு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த நெல் அறுவடையை கொள்வனவு செய்தல், நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நேரடியாகவும் மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர்களால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை இயக்குவதன் மூலமும் மேற்கொள்ளப்படும். அதற்குத் தேவையான 29,805 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு அரச வங்கிகள் மூலம் வழங்கப்படும். அதற்கமைய, விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவையால் கீழ்வருமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(i) 2021/2022 பெரும் போகத்தில் அரசாங்கம் நெற் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் துறையினருடன் போட்டித்தன்மை மிகுந்த விலைகளுக்கு சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல் கொள்வனவு செய்தல்

(ii) 2021/2022 பெரும் போகத்தில் நெல் அறுவடையில் குறைவு ஏற்பட்டால் அதனால் பாதிப்புக்குள்ளாகும் நெல் விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 25/- ரூபா வீதம் இழப்பீட்டுத் தொகை செலுத்துதல்

09. உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் தொற்று நீக்கப்பட்ட திரவ சிறியளவு சத்தூட்டத் திரவம் ( Sterile Liquid Small Volume Parenterals – SLSVP Injectable ) அரச துறைக்காக கொள்வனவு செய்தல்

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் தொற்று நீக்கப்பட்ட திரவ சிறியளவு சத்தூட்டத் திரவம் ( Sterile Liquid Small Volume Parenterals – SLSVP Injectable ) அரச துறைக்காக கொள்வனவு செய்வதற்காக கிட்டத்தட்ட அரசாங்கம் வருடாந்தம் 3,000 மில்லியன் ரூபாய்களை (15 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவிடுகின்றது. குறித்த சத்தூட்ட திரவம் 50 மில்லியன்கள் வருடாந்தம் உற்பத்தி செய்யக்கூடிய வகையிலான இயலளவைக் கொண்ட தொழிற்சாலையொன்றை பெல்லேகலே பிரதேசத்தில் அமைப்பதற்காக வரையறுக்கப்பட்ட கெலூன் லயிஃப்சயன்சஸ் (தனியார்) கம்பனிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்புடைய தரநியமங்களுடன் தொற்று நீக்கப்பட்ட திரவ சிறியளவு சத்தூட்டத் திரவத்தை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு இயலுமை கொண்ட ஒரே கம்பனியான இக்கம்பனி 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் உற்பத்திகளை விநியோகிப்பதற்குத் தயாராகவுள்ளது. அதற்கமைய, குறித்த உற்பத்திகளை அரச துறையின் தேவைகளுக்காக விநியோகிப்பதற்கு இயலுமான வகையில் குறித்த கம்பனிக்கும் அரச மருந்துகள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 2007 ஆம் ஆண்டு 54 ஆம் இலக்க ஒளடதங்களுக்கு அடிமையானவர்களை (சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல்) தொடர்பான சட்டத்தை திருத்தம் செய்தல்

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் அவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்கான ஏற்பாடுகள், 2007 ஆம் ஆண்டு 54 ஆம் இலக்க ஒளடதங்களுக்கு அடிமையானவர்கள் (சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல்) தொடர்பான சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகள், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களும் நீதி அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. வருமான அடிப்படையிலான வரி தொடர்பாக இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வரி செலுத்தாமல் தவிர்ப்பதை தடுத்தலுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கம் கீழ்க்காணும் உடன்பாடுகளை எட்டியுள்ளது.

(i) இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வருமான வரி செலுத்தாமல் விடுவதைத் தடுத்தல் போன்றவற்றுக்காக இந்திய அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்த கூட்டணிக்கு கையொப்பமிடல்

(ii) துருக்கி அரசாங்கத்துடன் வருமான அடிப்படையிலான வரி தொடர்பாக இரட்டை வரி விதிப்பை தடுத்தல் மற்றும் வரி செலுத்தாமல் தவிர்ப்பதை தடுத்தலுக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

(iii) செக் குடியரசின் அரசாங்கத்துடன் வருமான அடிப்படையிலான வரி தொடர்பாக இரட்டை வரி விதிப்பை தடுத்தல் மற்றும் வரி செலுத்தாமல் தவிர்ப்பதை தடுத்தலுக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

அதற்கமைய, குறித்த ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கும், 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் குறித்த ஒப்பந்தங்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 − 8 =

Back to top button
error: