பாரம்பரியக் கைப்பணித் துறையில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களின் கலைப் படைப்புகளை தேசிய மட்டத்தில் கௌரவிக்கும் “ஷில்ப அபிமாணி – 2021” பாரம்பரியக் கைப்பணித் துறைக்கான ஜனாதிபதி விருது விழா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில், இன்று (25) சிறிமாவோ பண்டாரநாயக்க மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபத்தில் இடம்பெற்றது.
பாரம்பரிய, கலாசார முக்கியத்துவமிக்க மற்றும் கலைப் பெறுமதிமிக்க அதி சிறந்த கலைப் படைப்புகளின் பாதுகாப்பு, அவற்றை மேம்படுத்தல் மற்றும் அவ்வாறான கலைப் படைப்புகளை வழங்கும் கலைஞர்களை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, “தேசிய ஷில்ப அபிமாணி” ஜனாதிபதி விருது விழா வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்றது.
பிரம்பு, பித்தளை, களிமண் உற்பத்திகள், மர வேலைப்பாடுகள் மற்றும் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலின் கீழ், தேசிய அருங்கலைகள் பேரவையினால் இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, நாடு முழுவதும் வியாபித்திருக்கும் பாரம்பரிய மற்றும் நவீன கைவினைஞர்களின் கலைப் படைப்புகள், மாகாண மற்றும் தேசிய ரீதியில் கௌரவிக்கப்பட்டன.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் கலாநிதிகள் அடங்கிய நடுவர் குழுவினால், 21 பிரிவுகளின் கீழ் மிகச் சிறந்த கலைப் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 8,000 கலைப் படைப்புகளிலிருந்து மாகாண மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு, வெள்ளி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய ரீதியில் பாரம்பரியமாகவும் நவீன கலைப் பிரிவுகளின் கீழும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் இருவர் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கரங்களினால் “சுவர்ண விருதுகள்” வழங்கப்பட்டன.
கைப்பணித்துறையின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலைஞர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் வகையிலான மாதாந்தக் கொடுப்பனவுக்கான காசோலைகள், இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவினால் இதன்போது இரு கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன.
விருது விழாவைக் கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முத்திரை மற்றும் அட்டைப்படம் போன்றன, ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
“ஷில்ப அபிமாணி – 2021” கலைப் படைப்புப் போட்டியில் வெற்றி பெற்ற கலைப் படைப்புகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அப்படைப்புகளை உருவாக்கிய கலைஞர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இவ் விருது விழாவில் அமைச்சர் விமல் வீரவங்ச, தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் சம்பத் அருஹெபொல ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.