crossorigin="anonymous">
அறிவியல்

கொரோனா தடுப்பூசி மாதவிடாய் கால அளவில் மாற்றங்கள் ஏற்படலாம்

கொரோனா தொற்று விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை குறைக்கலாம்

“கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதைத் தொடர்ந்து, மாதவிடாய் கால அளவில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், அவை விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பும்,” என்று இங்கிலாந்தின் முன்னணி மாதவிடாய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லண்டனின் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் விக்டோரியா மாலே, அமெரிக்கா மற்றும் நார்வேயில் இருந்து பெண்களின் மாதவிடாய் சுழற்சிகளை கண்காணித்த ஆய்வுகள் இதை “மீண்டும் உறுதிசெய்வதாக” கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டால் கருவுற முடியாமல் போகும் என்பது போன்ற கவலைகளைத் தூண்டுவதற்கு தவறான தகவல்களே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

கோவிட் தடுப்பூசிகள், குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனைப் பாதிக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று இங்கிலாந்து மருத்துவ ஒழுங்காற்று அமைப்பு கூறுகிறது.

மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை முகமை, கோவிட் தடுப்பூசிக்குப் பிறகு எதிர்பாராத ரத்தப்போக்கு, அதிக எடை மற்றும் தாமதமான மாதவிடாய் குறித்து 37,000-க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றுள்ளது.

பெண்களின் சுழற்சிகள் இயற்கையாகவே மாறுபடும் என்பதால், தடுப்பூசியால் மாறுபடுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அந்த நிறுவனம் எப்போதும் கூறி வந்துள்ளது. ஆனால், இன்னும் விரிவான ஆய்வுக்கு விஞ்ஞானிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஒரு பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழ் தலையங்கத்தில், இனப்பெருக்க நோய் எதிர்ப்புத் துறையின் விரிவுரையாளர் மருத்துவர் மாலே இரண்டு ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு செயலியைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 4,000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஓர் அமெரிக்க ஆய்வில், இரண்டாவது தடுப்பூசி டோஸுக்கு பிறகு, அவர்களுடைய அடுத்த மாதவிடாய் பாதி நாள் தாமதம் ஆவதையும் அதற்குப் பிறகு தாமதம் ஆவதில்லை என்பதையும் கண்டறிந்தது.

ஒரே சுழற்சியில் இரண்டு டோஸ்களை பெற்றவர்களுக்கு இரண்டு நாள் தாமதம் இருந்துள்ளது. ஆனால், இங்கிலாந்தில் உள்ள பெண்களிடையே அது பெரியளவில் நிகழவில்லை என்று மருத்துவர் மாலே கூறுகிறார்.

இங்கிலாந்தில் இரண்டு டோஸ்களுக்கு இடையே இருக்கும் கால அளவு எட்டு வாரங்கள் ஆகும். தடுப்பூசி போடாத 25 பெண்களில் ஒருவருக்கு மாதவிடாய் சுழற்சியின் நீளம் எட்டு நாட்களுக்கும் மேலாக உள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களில் 10-இல் ஒருவரின் மாதவிடாய் சுழற்சி காலம் அதே அளவு உள்ளது. ஆனால், அவர்களுடைய மாதவிடாய் இரண்டு சுழற்சிகளுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது.

நார்வேயில் 5,600-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட வேறு ஆய்வு ஒன்று, இயற்கையாக எவ்வளவு காலத்திற்கு மாதவிடாய் மாறுபடும் என்பதைக் காட்டுகிறது. ஏறக்குறைய 40% பேர் தடுப்பூசி போடுவதற்கு முன்பே குறைந்தது ஒரு மாற்றத்தையாவது எதிர்கொண்டனர். அதில் மிகவும் பொதுவான புகாராக இருந்தது, வழக்கத்தைவிட அதிகமாக ரத்தப்போக்கு நிகழ்வது.

மருத்துவர் மாலே, “தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தொடர்ந்து மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், இயற்கை மாறுபாட்டுடன் அவற்றை ஒப்பிடும்போது சிறிய அளவிலும் விரைவாக இயல்பு நிலைக்கு மாறக்கூடியதாகவும் தான் இருக்கின்றன,” என்று கூறினார்.

“கோவிட்-19 தடுப்பூசிகள் பெண்களிடையே மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது என்ற தவறான தகவலின் அடிப்படையில்” எழுந்ததுதான் பெண்களின் கவலைகள் என்றும் அவர் கூறினார். மேலும் கருத்தரிக்க முயலும் தம்பதியரின் கர்ப்ப விகிதங்கள் பற்றிய கூடுதல் ஆய்வுகள், தடுப்பூசி அதற்குக் காரணமில்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இருப்பினும், கோவிட் தொற்று, “விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தைக் குறைக்கலாம்.” அதைப் பற்றி விரிவாகப் புரிந்துகொண்டால், நோயாளிகளுக்குச் சரியான ஆலோசனையை வழங்க முடியும்.

மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு செயலியில் இங்கிலாந்து பயனர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. மாதவிடாய் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு இருந்த, “குறைவான முன்னுரிமை,” இந்த நிலையை அடைய நீண்ட நேரம் எடுத்தது என்று மருத்துவர் மாலே கூறினார்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 92 − 91 =

Back to top button
error: