ரஃபேல் நடால் கிராண்ட் ஸ்லாம் பட்டம் சூடி, டென்னிஸ் உலகில் புதிய சரித்திரம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் மெத்வதேவை ரசிகர்களை சிலிர்க்கவைத்த ஆட்டத்தில் வீழ்த்திய ஸ்பெயினின் ரஃபேல் நடால், 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் சூடி, டென்னிஸ் உலகில் புதிய சரித்திரத்தை எழுதினார்.
5 மணி 24 நிமிடங்கள் வரை நீடித்த இந்த காத்திரமான ஆட்டத்தில், நடால் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார்.
டென்னிஸ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து படைத்த ஞாயிறுக்கிழமை (30) ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் – ஸ்பெயினின் ரஃபேல் நடால் மோதினர். இதுவே 2022-ம் ஆண்டின் மறக்க முடியாத முதல் டென்னிஸ் போட்டியாகவே ரசிகர்களுக்கு அமைந்தது.
களத்தில் ஆரம்பம் முதலே அதகளம்தான். முதல் செட்டில் மெத்வதேவ் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6-2 என்ற கணக்கில் வென்றார். இதனால், இரண்டாவது செட் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி பரபரத்தது. இந்த செட்டையும் மெத்வதேவ் தான் வென்றார். எனினும், நடால் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்து, கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது செட்டை மெத்வதேவ் 7-6 (7-5) என்ற கணக்கில் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு மிகுந்திருந்த மெத்வதேவுக்கு, தனக்கு வழக்கமான ஆட்ட நேர்த்தியால் மூன்றாவது செட்டில் அதிர்ச்சி அளித்தார் நடால். அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தியதன் மூலம் களத்தில் முன்னேற ஆரம்பித்தார்.
அதே உறுதியான ஆட்டத்தை நான்காவது செட்டிலும் வெளிப்படுத்தி, அதையும் 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். மெத்வதேவும் இயன்றவரையில் போராடினார். ஆனால், உத்வேகக் காற்றோ நடால் பக்கம் வலுத்தது. முதல் இரண்டு செட்களை இழந்த பிறகும், நடால் மீண்டெழுந்த விதம் கண்டு ரசிகர்கள் சிலிர்த்தனர்.
நடாலின் வெற்றியை உறுதி செய்த ஐந்தாவது செட்டிலும், ஆரம்பத்திலேயே அவர் ஆதிக்கம் செலுத்தினார். இந்த செட்டில் 5-3 என்ற நிலையில் முன்னிலை வகித்த நடாலுக்கு மீண்டும் அதிர்ச்சி தந்தார் மெத்வதேவ். அதன்பின் அடுத்தடுத்து இரண்டு கேம்களை வசப்படுத்தி 5-5 என்ற சமநிலைக்கு வந்தார் மெத்வதேவ். ஆட்டம் விறுவிறுப்பின் உச்சத்துக்கே சென்றது. அதன்பின் இரண்டு கேமையுமே நடால் வென்றார்.
கடைசி வரை வெற்றியின் விளிம்பில் இருந்த மெத்வதேவ் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இறுதியில், அந்த செட்டை நடால் 7-5 என்ற கணக்கில் வெற்று, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி, 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற மகத்தான சரித்திரத்தை நிகழ்த்தினார்.(இந்து)