மியான்மரில் இராணுவம் – ஆயுதமேந்திய குழுக்கள் கடுமையான சண்டை
அரசாங்க படைகளை எதிர்த்து போராடும் People's Defence Force -PDF
மியான்மர் ராணுவத்துக்கும் ஆயுதமேந்திய பொதுமக்கள் குழுக்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ராணுவத்தை எதிர்த்துப் போராடுபவர்களில் பலர், மியான்மரில் ஏற்பட்ட ராணுவ ஆட்சியால் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த இளைஞர்கள். இந்த வன்முறையின் தீவிரத்தன்மை, விரிவு, எதிர்ப்பின் ஒருங்கிணைப்பு ஆகியவை, இந்த மோதல், எழுச்சியிலிருந்து உள்நாட்டுப் போராக மாறுவதை சுட்டிக்காட்டுகிறது.
இந்த சிக்கலைக் கண்காணிக்கும் அமைப்பான ACLED [Armed Conflict Location and Event Data Project] அளித்த தரவுகளின்படி, வன்முறை இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது . களத்திலிருந்து வரும் செய்திகள், சண்டை பெரிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும், நகர்ப்புற மையங்களை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
1 பிப்ரவரி 2021 அன்று இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து சுமார் 12,000 பேர் அரசியல் வன்முறையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்களைத் தொகுத்துள்ளது ACLED. மோதல்கள் கொடியதாக வளர்ந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் முதல் வலுவடைந்த இந்தப் போரில் துல்லியமான இறப்பு எண்ணிக்கையை சரிபார்ப்பது கடினமாக இருந்தாலும், உள்ளூர் ஊடகங்கள் மற்றும் பிற செய்திகளின் அடிப்படையில் ACLED தெரிவித்த எண்ணிக்கைதான் இந்த 12000.
பர்மா என்றும் அழைக்கப்பட்ட மியான்மரில் நடைபெற்று வரும் மோதலை இப்போது உள்நாட்டுப் போர் என்றுதான் அழைக்க வேண்டும் என்றும், ராணுவத்தின் மீது அழுத்தம் கொடுத்து ஜனநாயகத்தை மீட்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் “வலுவான நடவடிக்கையை” எடுக்க வேண்டும் என்றும் பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிஷெல் பேச்சலெட் ஒப்புக்கொண்டார்.
இந்த நெருக்கடி தொடர்பில் சர்வதேச சமூகம் போதிய அளவு அவசரமாக எதிர்வினையாற்றவில்லை என்றும் அவர் கூறினார். நிலைமையை “பேரழிவு” என்று விவரித்த அவர், மோதல் இப்போது வட்டார நிலைத்தன்மையை அச்சுறுத்துகிறது என எச்சரித்தார்.
அரசாங்கப் படைகளை எதிர்த்துப் போராடும் குழுக்கள் ஒட்டுமொத்தமாக மக்கள் பாதுகாப்புப் படை (People’s Defence Force -PDF) என அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட போராளிக் குழுக்களின் ஒரு கூட்டமைப்பு.
18 வயதான ஹேரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ராணுவக் கிளர்ச்சியை எதிர்த்துப் போராட்டங்களில் சேர்ந்தபோது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருந்தார். மத்திய மியான்மரில் PDF படைப்பிரிவுத் தளபதியாக மாற வேண்டும் என்பதற்காக தனது பல்கலைக்கழகத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளார்.
பிப்ரவரி 2021 போராட்டத்தின் போது, மாணவி மியா த்வே கொடூரமாக சுடப்பட்டு மரணமடைந்த பிறகுதான், தனக்கு PDF இல் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.
ஹேராவின் பெற்றோர்கள் தங்கள் மகள் ஒரு PDF போர்ப் பயிற்சி வகுப்பைத் தொடங்கியபோது முதலில் கவலையடைந்தனர், ஆனால் அவள் தீவிரமானவள் என்பதை உணர்ந்தபோது அவர்கள் அதை ஒப்புக்கொண்டனர்.
இது செய்தி அறிக்கைகள், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் வெளியீடுகள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பாதுகாப்பு தகவல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
ACLED ஒவ்வொரு செய்தி அறிக்கையையும் சுயாதீனமாக சரிபார்க்கவில்லை என்றாலும் , நிகழ்வுகள் மற்றும் இறப்பு குறித்த புதிய தகவல்கள் கிடைக்கப்பெறுவதால், இறப்புகள் பற்றிய அதன் தரவு தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதாக அது கூறுகிறது.
விவசாயிகள், இல்லத்தரசிகள், டாக்டர்கள் மற்றும் பொறியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இணைந்துதான் PDF உருவானது. இவர்கள் அனைவரும், இந்த ராணுவ ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்ற உறுதியுடன் ஒன்றுபட்டுள்ளனர்.
“பல [பொதுமக்கள்] இந்த போராளிக் குழுக்களுக்குள் இதுவரை சென்றுள்ளனர். பலர் மக்கள் பாதுகாப்பு படைகள் (PDF) என்று அழைக்கப்படுபவர்களை உருவாக்கியுள்ளனர்” என்று மிஷெல் பேச்சலெட் பிபிசியிடம் கூறினார்.
மேலும், “அதனால்தான், நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன், இதற்காக நாம் இன்னும் வலுவாக ஏதாவது செய்யாவிட்டால், அது சிரியாவின் நிலைமையைப் போல மாறிவிடும்.” என்றும் தெரிவித்தார்.
மத்திய மியான்மரின் சகாயிங்க் பகுதியில் பல PDF குழுக்களை கட்டுப்படுத்தும் முன்னாள் தொழிலதிபரான நாகர், “இது சமமான சண்டை அல்ல” என்று பிபிசியிடம் கூறினார். PDF ஆனது கவண்களுடன் மட்டுமே தொடங்கியது, இருப்பினும் அவர்கள் தங்கள் சொந்த ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் தற்போது உருவாக்கியுள்ளனர்.
பெரும் ஆயுத பலம் கொண்ட ராணுவம் வான்வழி சுடும் சக்தியைக் கொண்டுள்ளது. அண்மைக்காலமாக இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யா, சீனா உட்பட இந்த ராணுவ ஆட்சிக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடுகளிடமிருந்து அவர்கள் ஆயுதங்களை வாங்க முடியும்.
இது தொடர்பாக ஒரு வெளிப்படையான விசாரணை ஒன்று பிபிசியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அந்த விசாரணை அறிவிப்பு, ரஷ்ய கவச வாகனங்கள் சில வாரங்களுக்கு முன்பு யாங்கூனில் இறக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.
ஆனால் PDF இன் பலம் உள்ளூர் சமூகங்களில் அதற்கு உள்ள ஆதரவு. அடிமட்ட எதிர்ப்பாக ஆரம்பித்து, இப்போது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட , தைரியமான மற்றும் கடினமானதாக இந்தப் போர் மாறியுள்ளது . ராணுவ ஆட்சியால் நாடுகடத்தப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் [NUG] சில PDF குழுக்களை அமைக்கவும் வழிநடத்தவும் உதவியது. மேலும் அதிகாரபூர்வமற்ற முறையில் மற்றவர்களுடன் தொடர்பிலும் உள்ளது.
டிசம்பர் மாதம் நடந்த மற்றொரு ராணுவத் தாக்குதலில் உயிர் பிழைத்த ஒருவரிடம் பிபிசி பேசியது. மத்திய மியான்மரில் உள்ள நாகாட்வினில் உள்ள அவர்களது கிராமத்திற்குள் ராணுவ வீரர்கள் நுழைந்தபோது ஓட முடியாமல் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் மூவர் முதியவர்கள், இருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கிராம மக்கள் கூறுகின்றனர். ராணுவத்தினர், எதிர்ப்புப் போராளிகளைத் தேடிக்கொண்டிருந்ததாக உயிர் பிழைத்தவர் கூறுகிறார்.
இறந்த ஒருவரின் மனைவி, தனது கணவரின் உடலில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாக கூறுகிறார். “விளக்கம் சொல்லும் அளவுக்கு கூட பேச முடியாத ஒரு முதியவரை அவர்கள் கொன்றனர். அதை என்னால் மறக்கவே முடியாது. அதை நினைக்கும் போதெல்லாம் அழுகிறேன்” என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.
ராணுவம் நேர்காணல் வழங்குவதெல்லாம் மிக அரிது. ஆனால் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் இந்த ராணுவ ஆட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன் , PDF ஐ பயங்கரவாதிகள் என்று விவரித்தார். அவர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கைகளை நியாயப்படுத்தும் விதமாக அவர் இப்படி ஒரு சொல்லைப் பயன்படுத்தினார்.(பிபிசி)