பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நிதியத்திலுள்ள பணத்தை அவரது மக்கள் தொடர்பு செயலாளர் மோசடி செய்த செய்தியை பல கோணங்களில் நோக்க முடியும். நான் இந்த செய்தியை பார்த்த விதம் வேறுப்பட்டதாகும். வாழ்க்கை கொண்டு செல்ல முடியாதமையின் காரணமாகவே பிரதமரின் செயலாளர் பணத்தை கொள்ளையடித்து இருப்பார். ஆகவே பிரதமரின் செயலாளருக்கு கூட வாழ்க்கை கொண்டு செல்ல முடியாத நிலைமை எனில் சாதாரண மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும். இதுதான் நாட்டு மக்களின் நிலைமையாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.
ஹாரிஸ்பத்துவ தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் இயங்கும் இளைஞர் சக்தியை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெற்றியடைந்த பின்னர் இன,மத,கட்சி பேதங்கள் எதுவும் இன்றி இளைஞர்கள் ஒன்றிணைந்து வீதியோர சுவர்களில் சித்திரம் வரைந்தனர். எமக்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்து விட்டார் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்களுக்கு இருந்தது. கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட சித்திரம் வரைந்தனர்.
வெளிநாட்டில் வெளிவாய்ப்புக்கு சென்றவர்கள் அதற்காக செலவளித்து வந்து கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஜனாதிபதியை புகழ்ந்தனர். ஆனால் தற்போது நிலைமை என்ன? பொதுவாக எதிர்க்கட்சிக்கே அரசாங்கத்தின் மீது அதிருப்தி இருக்கும். ஆனால் குறுகிய காலத்தில் அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களே வீதிக்கு இறங்கி போராடுகின்றனர்.இந்த நிலைமைக்கு நாட்டை அரசாங்கம் தள்ளியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் தூர நோக்கற்ற அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக பொருளாதாரம் பெரும் சீரழிவை நோக்கி பயணிக்கின்றது. இந்நிலையில் நாட்டின் இரு தொழிற்சாலைகள் மாத்திரம் இரவும் பகலும் இயங்கி கொண்டிருக்கின்றது. அதுதான் பியகமவில் அமைந்துள்ள நோட்டு அச்சிடும் தொழிற்சாலையும்; வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு அச்சிடும் தொழிற்சாலையுமே சரியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
அத்துடன் இளைஞர்களை நாம் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தற்போது சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் கவனம் அநுர குமார திஸாநாயக்கவின் பக்கம் திரும்பியுள்ளது. இளைஞர்கள் அனைவரும் ஒன்றை கவனத்தில் எடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியினால் சர்வதேச உறவை வெற்றிக்கொள்ள முடியாது. சர்வதேச அளவில் ஐக்கிய மக்கள் சக்திக்கே மதிப்பும் மரியாதையும் உள்ளது. மக்கள் விடுதலை முன்னணியில் உள்ளவர்களுக்கு சர்வதேச தொடர்புகளும் இல்லை. அனுபவமும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியில் திறமை வாய்ந்தவர்கள் பலரும் உள்ளனர்” என்றார்.