இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று (07) இந்தியாவிற்கு மூன்று நாள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்டு சென்றுள்ளார்
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருவது, மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.
சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்;.
வெளியுறவுத்துறை அமைச்சர், பல்வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி, இந்தப் பயணத்தில் ஈடுபடுவதாக வெளியுறவுத்துறை அமைச்சரின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்துவதற்கும், பௌத்த மதம் தொடர்பிலான பல்வேறு திட்டங்களை ஆரம்பிப்பதற்கும், இந்திய – இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவினால் இலங்கைக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இந்தியாவிடமிருந்து கிடைக்கும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்துவதற்காகவே வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவிற்கான பயணம் மேற்கொள்கிறார்.(பிபிசி)