போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது.
ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவியாகவே இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வைத்து இன்று (08) ஜப்பான் தூதுவர் மிசூகொஷி ஹிடெயாக்கி (Mizukosi Hideaki) அவர்களினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம், இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
லேண்ட் குரூஸர் ரக வாகனங்கள் 28, ப்ராடோ வாகனமொன்று, போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிவதற்கான ஸ்கேனர் இயந்திரத் தொகுதியொன்று உள்ளிட்ட பெறுமதிமிக்க உபகரணங்களே, இவ்வாறு கையளிக்கப்பட்டன. இவற்றின் பெறுமதி, 700 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைப் பொலிஸார் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் சார்பில், பொலிஸ் மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன அவர்களும் அரச பகுப்பாய்வாளர் கௌரி ரமனா அம்மையாரும், இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்களைப் பொறுப்பேற்றனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.