இலங்கை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் முதல் தடவையாக நேற்று முன்தினம் (08) கூடிய அரசாங்க நிதி பற்றிய (The Committee on Public Finance) குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். அவருடைய பெயரை பேராசிரியர் ரஞ்சித் பண்டார முன்மொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு 13ஆம் இலக்க மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) சட்டத்துக்கான திருத்தத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய யாராவது ஒரு நபரினால் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் கணக்கிற்கு மேலதிகமாகச் செலுத்தப்பட்ட அல்லது பிழையாகச் செலுத்தப்பட்ட ஏதேனும் முத்திரைத் தீர்வையை மீளளிப்பதற்காக ஏற்பாடு செய்வது இந்தத் திருத்தத்தின் சட்டப்பயனாகும்.
2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கொழும்புத் துறைமுக விரிவாக்கலின் கீழான மேற்குக் கொள்கலன் முனையத்துக்கான (WTC-1) அபிவிருத்தித் திட்டத்துக்கு வரி விலக்கு வழங்குவது குறித்த 2021 நவம்பர் 15ஆம் திகதியுடைய 2254/2 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கும் இக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதன் ஊடாக, குறிப்பிட்ட திட்டத்துக்கான இருபத்தைந்து வருட காலத்துக்கு வரி விலக்களிக்கப்படுவதுடன், பெறுமதி சேர் வரி, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, செஸ் வரி மற்றும் சுங்கத் தீர்வை என்பன 05 வருடங்களுக்கு விலக்களிக்கப்படுகின்றன. இதில், முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் புதிய தலைவர் ராஜா எதிரிசூரிய குறித்த விடயத்தை எழுப்பி கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, இந்த வரி விலக்கானது பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்துள்ள நாட்டுக்கு எந்தளவுக்குப் பொருத்தமாக அமையும் எனக் கேள்வியெழுப்பினார். தற்போதைய சூழலில் ஏனைய நாடுகளுடன் போட்டியிடும் வகையில் இவ்வாறான வரிச்சலுகைகளை வழங்குவது அவசியமானது என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில் இராஜங்க அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க, கஞ்சன விஜேசேகர, இந்திக்க அனுருத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, விஜித ஹேரத், முஜிபுர் ரஹுமான், காவிந்த ஜயவர்தன, நளின் பெர்னாண்டோ, பிரமித பண்டார தென்னகோன், பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி சுரேன் ராகவன், அனூப பஸ்குவல், இசுறு தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டனர்.