இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 31 ஆயிரத்து 990 குடும்பங்களைச்சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் மூவர் உயிரிழ்ந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்தோடு இரண்டு பேர் காணாமற்போயுள்ளனர். ஏழு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 468 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.33 பாதுகாப்பு நிலையங்ளில் 1145 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து182 தங்கியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். 27 நலன்புரி மத்திய நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது பிரதேசங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கடற்படை 13 நிவாரண குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
இதேவேளை ,பயண கட்டுப்பாடு காரணமாகவும், மழையுடன் கூடிய காலநிலையாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவை பகிர்ந்தளிக்கும் வேலை திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுவதாக காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்தார்.
தவளம, நெலுவ ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி உணவு பொருட்களை வீடுகளுக்கு சென்று பகிர்ந்து அளிக்க மாத்தறை மாவட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலன்நறுவை மாவட்டத்தில் 9 கூட்டுறவு சங்கங்கள் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை பகிர்ந்தளித்து வருகின்றன.