கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் கோவிட்19 தடுப்பூசி
(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 8ஆம் திகதி முதல் கோவிட்19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கான தடுப்பூசி எப்போது செலுத்தப்படும் என்று கேட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் குறித்த கொரோனா தடுப்பு ஊசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை எமக்கு கிடைக்க உள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு எவ்வளவு தொகை என்பது இதுவரை சொல்லப்படவில்லை எனினும் எதிர்வரும் எட்டாம் திகதி செவ்வாய்க்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பிரதேசங்கள் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட முதல் மூன்று பிரதேசங்களுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும், அடுத்த கட்டமாக கல்முனைப் பிராந்தியத்தில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அரச ஊழியர்கள், கர்ப்பிணிகள், முன்னணி செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கும் இத்தடுப்பூசியை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.