crossorigin="anonymous">
வெளிநாடு

ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்

உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக  சர்வதேச நீதிமன்றத்தில் புகார்

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் பெலாரஸின் கோமெல் நகரில் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனிடையே, சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் அரசு புகார் மனு அளித்துள்ளது.

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.

உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரான கார்கிவ்வை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவம் நேற்று காலை அறிவித்தது. இதை அந்த பிராந்திய ஆளுநர் அலியக் சினிகுபோவ் மறுத்துள்ளார். அவர் கூறும்போது ‘‘ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் முன்னேறியது உண்மைதான். அவர்களை உக்ரைன் வீரர்களும் பொதுமக்களும் விரட்டியடித்து பின்வாங்கச் செய்துள்ளனர். தற்போது கார்கிவ் நகரம் முழுமையாக உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் தரப்பு மறுத்துவிட்டது. தற்போது அவர்களே பெலாரஸின் கோமெல் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். இதை ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளது. கோமெல் நகரில் உக்ரைன் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய குழு தயாராக உள்ளது.

இந்தக் குழுவுக்கு ரஷ்ய அதிபர் புதினின் பிரதிநிதி விளாடிமிர் மெடின்கி தலைமை ஏற்றுள்ளார். கடந்தமுறை பேச்சுவார்த்தைக்காக போரை தற்காலிகமாக நிறுத்தினோம். இந்த முறை போரை நிறுத்த மாட்டோம். தொடர்ந்து போர் நடைபெறும். பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இல்லை என்றால் அதற்கான விளைவுகளை அந்த நாடு சந்திக்க நேரிடும்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. எனினும் எந்த இடத்தில், எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 2 =

Back to top button
error: