உக்ரைனுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் – ரஷ்யா
2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வரு கிறது -உக்ரைன்
உக்ரைன் – ரஷ்யா உச்சகட்ட போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இதுபற்றி ஆலோசனை நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இதனிடையே, போரை முடிக்கு கொண்டுவரும் வகையில் உக்ரைன் – ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த உயர்நிலை தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.
சண்டையை நிறுத்தும் நோக் கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. உக்ரைனின் துறைமுக நகரமான கெர்சன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறி வித்துள்ளது. இதை அந்த நகர ஆளுநரும் உறுதி செய்துள்ளார்.
தலைநகர் கீவ் பகுதியை ரஷ்யப் படைகள் நெருங்கி வருவதாகவும், தலைநகரை காப்பாற்ற போராட்டம் நீடித்து வருவதாகவும் கீவ் நகர மேயர் விடாலி கிளிட்ஸ்ச்கோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் ஆலோசகர் கூறும்போது, ‘‘ரஷ்யாவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வரு கிறது’’ என்றார்.(இந்து)