பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல்
அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் நட்புறவோடு இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு எதிராக நடவடிக்கை
”பூமியில் நரகம் உள்ளது என்றால், அது காசாதான்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியா குத்தேரஸ் ஒருமுறை பேசியிருந்தார்.
நரகம் என்ற சொல் காசாவுக்கு எப்போதும் பொருத்தமாகவே இருந்திருக்கிறது. யாசர் அராஃபத்தின் மறைவுக்குப் பிறகு அரபு நாடுகளால் பாலஸ்தீனம் முற்றிலுமாக கைவிடப்பட்ட தேசமாகிவிட்டது. இதற்குச் சான்றுதான் சமீபத்தில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்யபட்ட கிழக்கு ஜெருசலேமின் டமாஸ்கஸ் கேட் பகுதியில் நடந்த மனதை பதைபதைக்கும் காட்சிகள்.
மார்ச் 1-ஆம் தேதி, முகமது நபிகள் விண்ணேற்றத்தைக் குறிக்கும் நாளான்று, கிழக்கு ஜெருசலேமில் டமாஸ்கட் கேட் பகுதியில், மன்வர் புர்கான் (11) என்ற காது கேளாத சிறுமி தனது குடும்பத்தினருடன் கூடியிருந்தார். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், பாலஸ்தீனர்களை கலைக்க தீவிரமாக இறங்கினர். தண்ணீரைப் பீய்ச்சியும், ஸ்டன் கையெறி குண்டுகளையும் வீசியும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் இஸ்ரேல் கையெறி குண்டு, காது கேளாத மன்வர் புர்கானின் தாடையில் தாக்கியதில் அவரது முகத்தில் ரத்தம் கொட்டியது. உடனடியாக அங்கு திரண்ட பாலஸ்தீனர்கள் மன்வாரை மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது மன்வார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அன்று நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மூன்று குழந்தைகள் (6 மாத குழந்தை உட்பட) படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீன போர்:
கடந்த ஆண்டு மே மாதம், பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு இரவில் தொழுகையில் ஈடுபட்டனர். சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர்.
இதில் பாலஸ்தீனத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவர்களில் 40-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக சுமார் 52,000 பாலஸ்தீனியர்கள் காசாவிலிருந்து வெளியேறிதாக ஐக்கிய நாடுகள் சபை அப்போது தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேலிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே பெயரளவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தாக்குதல்கள் தொடர்ந்தன.
இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில், பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று அமெரிக்க அதிபர் பைடன் வெளிப்படையாக தெரிவித்தார். இதற்கு எதிர்வினையாக ‘பாலஸ்தீனர்கள் அங்கு துடிக்கின்றனர். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்துள்ளது. ரத்தம் படிந்த கைகளால் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று துருக்கி அதிபர் விமர்சித்தார்.
இதில் அமெரிக்காவை விமர்சித்த எர்டோகனை ’யூத எதிர்ப்பு பேச்சுகளைத் தவிருங்கள்’ என்று அமெரிக்கா அப்போது அறிவுரை கூறியது.
ஜெருசலேம்… – ட்ரம்ப் பற்ற வைத்த நெருப்பு
பாலஸ்தீனம் என்னும் மத்திய கிழக்கின் பகுதி, முதல் உலகப் போருக்குப் பின், பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதில் யூதர்கள் சிறுபான்மையினராகவும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராகவும் இருந்தனர். இதில் பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு ஒரு தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்று பிரிட்டனிடம் யூதர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அங்கு இருந்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரண்டாவது உலகப் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, 1948-ம் ஆண்டு ஐ.நா-வின் ஒப்புதலோடு யூதர் மற்றும் அரபு பகுதி என பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டது. ஜெருசலேம் சர்வதேச நகரமானது. பின்னர் வந்த வருடங்களில் பிரிட்டன் இதில் தலையிடுவதை நிறுத்திக் கொண்டது.
1967-இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரமாக இருக்கும் என்று இஸ்ரேல் அப்போது அறிவித்தது. இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக வந்த டொனால்ட் ட்ரம்ப்,’இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே 2017-ஆம் ஆண்டு ’கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்குத் தொடர்ந்து இருக்கும்’ என்று தெரிவித்தார்.
ட்ரம்பின் முடிவை நிராகரிப்பதாக பாலஸ்தீனம் தெளிவாக கூறியது. ”ட்ரம்பின் முடிவு முட்டாள்தனமானது. பாலஸ்தீனம் பாலஸ்தீனர்களுக்கே சொந்தமானது. இதில் முடிவு எடுக்க நீங்கள் யார்?” என்று ஈரான் கேள்வி எழுப்பியது.
எதிர்ப்பை மீறி, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்தார். ‘சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி’ என்று மூர்க்கத்தனமாக முத்திரை குத்தப்பட்ட அந்தப் பொய்யை அதிபர் ட்ரம்ப் உடைத்திருக்கிறார் என்று அப்போதையை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசமாக பேசினார்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தீவிரமாகியது.
மேலும், ஷேக் ஜாரா பகுதியில் உள்ள பாலஸ்தீனக் குடும்பங்களை வெளியேற்றிவிட்டு அங்கே யூதக் குடும்பங்களைக் குடியேற்ற இஸ்ரேல் முயன்றது தொடர் மோதல்களுக்கு காரணமாகின.
பாலஸ்தீனத்தை கைவிட்ட அரபு நாடுகள்
பாலஸ்தீனத்தை ஒரு தேசமாக அறிவிக்கும் வரை இஸ்ரேலுடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்துகொள்ள மாட்டோம் என்று அரபு நாடுகள் கூறியிருந்தன. ஆனால் எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகள் இதனை மீறிய நிலையில் ஐக்கிய அரபு அமீரகமும் சமீபத்தில் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனை நண்பர்களால் எங்கள் நெஞ்சில் குத்தப்பட்ட கூர் கத்தி என்றே பாலஸ்தீன அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.
யாசர் அராஃபத்தின் மறைவுக்கு பிறகு பாலஸ்தீனத்தில் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள் தோன்றாததன் விளைவாக அந்நாடு தற்போது கத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மத்திய கிழக்கில் துருக்கியும், ஈரானும் மட்டுமே குரல்
எழுப்பி வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு சவால்விடும் ஹமாஸ் யார்?
பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹாமஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருகிறது.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு உலக முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் நாளும் ஒலித்தும் வரும் சூழலில், மேற்கு ஆசியாவில் பாலஸ்தீன மக்கள் மீது தினமும் இஸ்ரேல் நடத்தும் வன்முறைகளுக்கு உலகம் நாடுகள் எப்போதும்போல வாய்த் திறக்கவில்லை.
பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் என்பது வெறும் செய்தி என்ற தொனியில்தான் உலக நாடுகள் அணுகி வருகின்றனர். பாலஸ்தீன நிலப் பகுதிகளை ஆக்கிரமிப்பதையும் அம்மக்களை தாக்குவதை நிறுத்திக் கொள்ளுமாறு ஐ.நா. சபையும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து இஸ்ரேலிடம் கூறி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதுவரை செவி சாய்க்கவில்லை.
அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் நட்புறவோடும், அரசியல் தலைமைகளோடும் இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு எதிராக அடுத்தடுத்த நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
‘அமைதிக்கான நிலம்’ என்று யாசர் அராஃபத்தால் தன் வாழ்நாள் முழுவதும் கூறப்பட்டு வந்த பாலஸ்தீனம் தன்னை நாடாக அங்கிகரிக்கும் போராட்டத்தைத் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்தில் இரு நாடுகளுக்கு ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அந்த வேறுபாடுதான் இஸ்ரேலை பல படிகள் முன்னகர்த்தியிருக்கிறது. அது, பாலஸ்தீனத்திடம் தற்போது யாசர் அராஃபத் இல்லை என்பதே.(இந்து)