அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை உச்ச அளவில் மட்டுப்படுத்தும் வகையில் சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடி (டொலர் தட்டுப்பாடு) காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மின்தூக்கி மற்றும் வாயுச் சீராக்கியின் பயன்பாடுகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அதில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அரச அலுவலகங்களில் வாயுச் சீராக்கியின் பாவனையை பி.ப. 2.30 முதல் 4.30 வரை செயற்படுத்தாதிருப்பதற்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் உரித்துடைய எரிபொருளுக்கு மேலதிகமாக வழங்கப்படும் விசேட எரிபொருள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூரப் பிரதேசங்களிலுள்ள அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகளை கொழும்பிலுள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைப்பதை குறைப்பதுடன், அத்தியாவசிய விடயங்களுக்கு மாத்திரம் அவர்களை அழைப்பதுடன், அவர்கள அவ்வாறு அழைப்பதை தவிர்க்கும் நிலையில், வீடியோ தொழில்நுட்பம் மூலம் அதனை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வாகன பயன்பாட்டின் போது அதிகாரிகள் தனித்தனி வாகனங்களில் பயணிக்காது, ஒரே விடயத்திற்கு ஒரு வாகனத்தில் பல அதிகாரிகள் பயணிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.