crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஓட்டமாவடி மஜ்மாநகரில் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப் பணி நிறைவு

மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் காகிதநகர் 210பி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கிராமமே சூடுபத்தினசேனை – மஜ்மா நகராகும். கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இக்கிராமத்தில் வாழும் மக்கள் விவசாயம், விலங்கு வேளாண்மை, மீன்பிடி, மேட்டு நிலப்பயிர்ச் செய்கை போன்ற தொழில் நடவடிக்கைகளினூடாக தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக எமது நாட்டிலும் ஏராளமான உயிர்களை நாம் இழந்துள்ளோம். கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எம்மத்தியில் எழுந்து வரும் இச்சூழ்நிலையில், இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் கொவிட்-19 தொற்றினால் மரணித்த போது முஸ்லிம்களின் சமய அடிப்படையில் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது அவை எரிக்கப்பட்டமை தொடர்பில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கவலையடைந்தனர்.

இக்காலகட்டத்தில் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசிடம் கோரி வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அதன் பின்னர் இலங்கை அரசு கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கியது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கத்திற்குப் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட வேளையில், மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மஜ்மா நகர், சூடுபத்தினசேனை கிராமம் அடையாளம் காணப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் கோறளைப்பற்று மேற்கு, மத்தி ஆகிய பிரதேச செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கல்குடா கிளை, முஸ்லிம் பிரதேச சிவில் சமூக அமைப்புக்கள், பிரதேச ஜும்ஆப்பள்ளிவாயல்கள், மாவட்ட ரீதியில் காத்தான்குடி, ஏறாவூர் முஸ்லிம் சமூக நிறுவனங்களின் சம்மேளனங்களின் ஒத்துழைப்புடன் இதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவசர அவசரமாக ஜனாஸா நல்லடக்கத்திற்கு முதல் நாளிரவு மயான பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட அப்பகுதி சுத்திகரிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினரின் வழிகாட்டலில் முதலாவது ஜனாசா நல்லடக்கம் கடந்த மார்ச் மாதம் 05 ஆம் திகதி 2021 (05.03.2021) அன்று பி.ப 4.00 மணியளவில் நடைபெற்றது.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் பணியாற்றும் முஸ்லிம் ஊழியர்களினால் முஸ்லிம் மக்களின் சமய அனுஷ்டானங்களுடன் கொவிட்-19 சுகாதார வழிமுறைகளைப்பேணி நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்று முதல் இன்று வரை அவர்களே அனைத்தின மக்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 05.03.2021 தொடக்கம் 05.03.2022 வரை கொவிட்-19 தொற்றினால் மரணித்த 3,634 நபர்களின் உடல்கள் இம்மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அது தொடர்பான விபரம் வருமாறு:

பௌத்த சமயத்தவர்கள்: 291, இந்து சமயத்தவர்கள்: 269,கிறிஸ்துவ சமயத்தவர்கள்: 86, வெளிநாட்டவர்: 04

முஸ்லிம்கள்: 2,984 பேர் உள்ளடங்குகின்றனர். இற்றை வரைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய இராணுவத்தினரின் முழுமையான ஒத்துழைப்புடன் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை இந்த ஜனாஸா நல்லடக்கப் பணியினை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் சர்வதேச ரீதியில் முஸ்லிம் நாடுகளினாலும் மனித உரிமை அமைப்புக்களினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கிணங்க இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட கல்குடா முஸ்லிம் பிரதேச மக்கள் வசிப்பிடங்களுக்கான இடப்பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும், ‘ஒரு மனிதாபிமானம் கொண்ட சுமையாக’ இந்த ஜனாஸா நல்லடக்கத்திற்கான இடத்தை முஸ்லிம்களுக்கு மாத்திரம்மல்ல, இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மரணிக்கும் அனைவருக்குமென வழங்கியுள்ளனர். அது பாராட்டப்பட வேண்டியதாகும்.

மேலும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைவாக நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தத்தமது பிரதேசங்களில் 2022ம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி முதல் நல்லடக்கம் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டதற்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப்பணி முடிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அனுமதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் நாடளாவிய ரீதியில் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிவில் சமூக நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் தமது பிரதேச மக்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களை ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.

மேற்படி கொவிட்-19 மரண அடக்கஸ்தலமானது இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் நல்லிணக்கத்திற்கான அடையாளமாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 69 = 79

Back to top button
error: